Sunday, 22 January 2012

Map IP Address
Powered byIP2Location.com

உயர்நீதிமன்றத்தில் தமிழ்! என்ன சிக்கல்? யாருக்கு சிக்கல்?


தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தைத் தவிர மற்ற நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது வழக்கு தொடுப்பது, வழக்கு மறுப்பது, விசாரணை நடைமுறைகள், தீர்ப்பு வழங்கல் உள்ளிட்ட அனைத்தும் தமிழில் நடைபெறலாம் – நடைபெறுகிறது. இதனால் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை
.

ஆனால் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்துவதில் பல சர்ச்சைகள் உள்ளன. இது குறித்து பெரும்பாலான நீதிபதிகளும், உயர் குலத்தோர் என்று குறிப்பிடப் படுபவர்களும், மூத்த வழக்கறிஞர்களும் பொருள் பொதிந்த மவுனம் சாதிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமை பட்டியலில் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

அரசியல் பார்வையற்ற சராசரி குடிமகனுக்கு மேற்கூறப்பட்ட வாக்கியம் அதிர்ச்சி அளிக்கலாம். தமிழாய்ந்த முதல் அமைச்சருக்கு, தமிழை நீதிமன்ற மொழியாக்குவதில் தடை என்ன இருக்கக்கூடும் என்ற கேள்வி எழலாம். உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் ஏற்காத ஒரு பிரச்சினைக்கு தமிழக அரசை குற்றம் சாட்டுவது பொருத்தமற்றது என்ற எண்ணமும் வரலாம். ஆனால் அது முழுமையான சிந்தனையாகாது.

எந்த ஒரு அரசிலும், அதை மக்கள் நேயமுள்ள ஒரு தலைவர் வழி நடத்தினாலும் அந்த ஆட்சியில் சிலர் பாதிக்கப்படுவது இயல்பானதே! அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் தங்கள் குறைபாடுகளை ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு வழியில் எடுத்துச் சொல்லி தீர்வு காண்பது மக்களாட்சியின் வரம்புக்குள் அடங்கும் அம்சமே ஆகும்.

காமராஜர், அண்ணாதுரை போன்ற தலைவர்கள் ஆட்சியில் இருந்தபோது பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானாலோ, மக்கள் பிரதிநிதிகள் எடுத்துக்கூறினாலோ அந்த பிரசினைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு தீராத பிரசினைகளுக்காக பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அதையும் இயல்பாக ஏற்றுக்கொண்டு அந்தப் பிரசினையை தீர்க்க முயலும் பக்குவம் அந்த தலைவர்களுக்கு இருந்தது.
அண்மைக்கால ஆட்சிகளிலோ மக்களின் எந்த நியாயமான கோரிக்கைகளும் போராட்ட வடிவம் எடுக்கும் வரை கேட்காமலே புறக்கணிக்கும் போக்கு நிலவுகிறது. எனவே தவிர்கக இயலாமல் நடக்கும் போராட்டங்களையும் அரசின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக கருதாமல், தமது ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நிகழ்வாக ஆட்சியாளர்கள் கருதுவதும், அதனால் கதிகலங்கி போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முனைவதும் வாடிக்கையாகி வருகிறது. மக்களுடைய போராட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமலிருக்கும் வகையில் ஊடக நிறுவனங்கள் சரிக்கட்டப் படுகின்றன. எதிர்க் கட்சிகள் வெளியிடும் கோரிக்கைகள் திட்டமிட்டு திசை திருப்பப்படுகின்றன. அரசின், ஆட்சியாளர்களின் புகழ்பாடும் கருத்துகளே ஊடகங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்க்கப் படுகின்றன.

இந்த நிலையில் பாதிக்கப்படும் மக்களின் நியாயமான உரிமைகளை எடுத்துப் பேசும் களமாக நீதிமன்றம் அமைகிறது. மக்கள் பிரசினைக்காக வழக்கு தொடுக்கும்போது அந்த பிரசினை ஊடகங்கள் மூலமாக மக்களிடம் சென்றடைவதோடு, அந்த பிரசினை குறித்து பதில் அளிக்கும் நிர்பந்தமும் அரசுக்கு ஏற்படுகிறது. நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் அனைத்து வழக்குகளும் முறையாக விசாரிக்கப்படுகின்றவா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கிறதா? என்பது ஒருபுறமிருக்க, மக்களின் பாதிப்பு குறித்து விவாதிப்பதற்கு ஒரு களம் உருவாகிறது என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு அரசுத்தரப்பில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதும் கூடுதல் நற்பலனே.
மக்களின் நலனை முன்னிறுத்தும் பொதுநல வழக்குகளை உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ மட்டுமே தொடுக்க முடியும். உச்ச நீதிமன்றம் என்பது வெகு தொலைவில் இருக்கும்போது அன்றாட பிரசினைகளுக்கு தீர்வு காண உயர்நீதிமன்றமே அருகில் உள்ளது. இவ்வாறு மக்களின் நியாயமான பிரசினைகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது மக்கள் சார்ந்த வழக்கறிஞர்களுக்கு மொழியும் ஒரு தடையாகிறது. ஆங்கிலம் நன்று கற்ற வழக்கறிஞர்கள் பொருளீட்டும் வழக்குகளில் முழுமையாக ஈடுபடும் வாய்ப்பு கிடைத்துவிடுவதால் அவர்களில் பலருக்கும் சமூகம் குறித்த உணர்வுகள் விரைவில் அற்றுப்போய்விடுகிறது. அரசுத்தரப்பு வழக்கறிஞராக பணியாற்றுவோருக்கு அரசு அமைப்புகள் செய்யும் அனைத்து முறைகேடுகளையும் – அநீதிகளையும் நியாயப்படுத்த வேண்டிய “தொழில் தர்மம்” வந்து விடுகிறது.

இந்நிலையில் மக்களின் பிரசினைகளை முழுமையாகவும், அனுபவ பூர்வமாகவும் புரிந்து கொண்டு அந்தப் பிரசினைக்கு சட்டரீதியாக தீர்வு காண முனைபவர்கள் முழுமையான ஆங்கிலப் புலமை இல்லாமல் (ஆங்கிலப் புலமை வேறு: சட்ட அறிவு, சமூக உணர்வு வேறு!) சாமானியனின் வாழ்வை வாழும் சாதாரண வழக்கறிஞர்களே. இந்த வழக்கறிஞர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் மனு அளித்தல், தகவல் உரிமைச் சட்டப்படி தகவல் கோருதல் போன்றவையே அரசை பல்வேறு அம்சங்களிலும் முட்டுச்சந்தில் நிறுத்தி விடுகின்றன.

தகவல் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியே அரசையும், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கலங்கடிக்கும் இந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை நேரடியாக அணுகுவதில் அவர்களுக்கு தடையாக இருப்பது மொழி மட்டுமே. இந்தத் தடையை தவிர்ப்பதற்காகவே, உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டு காலமாக மக்கள் சார்பு வழக்கறிஞர்களாலும், சமூக பொறுப்புள்ளவர்களாலும் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனால் உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரிப்பது என்பது, தமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதைப் போன்ற சாதாரணமான அம்சம் அல்ல என்பது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரித்தால் கிடைக்கும் வாழ்த்துகளுக்கு எந்த பொருள் மதிப்பும் இல்லை என்பதும், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கச் செய்வதால் ஏற்படும் விளைவுகளால் பொருள் ரீதியான பெரும் இழப்பு ஏற்படும் என்பதும் பொருள்முதவாதிகளான தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு மிக நன்றாகவேத் தெரியும். எனவேதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு இணையான இந்த செயலை செய்வதற்கு அவர்களுக்கு துணிவில்லை.

தமிழை நீதிமன்ற மொழியாக்குவதற்கு தேவையான சட்ட நூல்கள் தமிழில் இருக்கின்றனவா? என்ற கேள்விகள் நீதிபதிகளாலும், பெரும்பான்மை வழக்கறிஞர்களாலும் எழுப்பப்படுகிறது. அண்டை நாடான இலங்கையில் மருத்துவம் தமிழ் வழி கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே பொறியியலை தமிழ்வழி கற்பிப்பதற்கான பாடநூல்கள் வெளியாகிவிட்டன. தமிழில் வாதாடும் வழக்கறிஞர்கள் பெருகும் நிலையில் சட்டநூல்களும் தேவையான அளவுக்கு வெளியாகும். தமிழை வளர்ப்பதற்காக இல்லை என்றாலும், வணிக நோக்கத்திலாவது தமிழில் தரம் வாய்ந்த சட்ட நூல்கள் வெளியாகும்.

தமிழில் வாதாடும் வாய்ப்பு கிடைத்தால் பொதுமக்களே நேரடியாக வழக்கை நடத்த முன் வந்து விடுவார்கள்: வழக்கறிஞர்களின் தொழில் வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற கருத்தும் சில வழக்கறிஞர்களிடம் உள்ளது. ஒரு வழக்கை நடத்த வெறும் சட்ட நூல்கள் (Bare Act Books) மட்டுமே போதாது என்பது வழக்கு நடத்தி அனுபவம் பெற்ற அனைத்து மக்களுக்கும் தெரியும். ஒரு வழக்கை வெற்றிகரமாக நடத்த அந்த விவகாரம் குறித்து நீதிமன்ற முன்மாதிரி தீர்ப்புகளும், வேறு பல அம்சங்களும் தேவை என்ற உண்மை சாதாரண மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தமிழில் வழக்கு நடத்தினால், வழக்கு நடத்தப்படும் விதம் குறித்து பொதுமக்கள் தெளிவு பெற வழி பிறக்கும். இது வழக்காடும் மக்களுக்கு நல்லதே. இதனால் நேர்மையான வழக்கறிஞர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படபோவதில்லை.

எனவே நீதிமன்ற மொழியாக தமிழை அங்கீகரிப்பதில் சாதாரண மக்களுக்கு நன்மையே ஏற்படும். இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது ஆளும் வர்க்கமாகவே இருக்கும். ஆட்சியில் இருப்போர், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரே தமிழ் நீதிமன்ற மொழியாவதில் முதன்மையாக பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள்.

மக்களின் உழைப்பை சுரண்டி திரட்டப்பட்ட பொது நிதியை அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தாமல் கவர்ச்சித் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வாக்குகளை அள்ள நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு, தமிழ் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாவதால் சிக்கல்கள் ஏற்படலாம். அரசின் பொறுப்பற்ற போக்கை, தொலைநோக்கற்ற குறுகிய அரசியல் பார்வைகளை, மக்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கும் சீர்கேட்டை பொதுநல வழக்கு என்ற பெயரில் பொதுமக்கள் கேள்வி கேட்டால், அக்கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஆட்சியாளர்களுக்கு வரும். தங்களை விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக, போற்றுதலுக்கு மட்டுமே உரியவர்களாக கருதிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிலை ஏற்படுவதை எப்படி அனுமதிப்பார்கள்? எனவே இந்த அரசியல்வாதிகள், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது பகல் கனவே!

இதையடுத்து உயர்குலம் சார்ந்தவர்களாக குறிப்பிடப்படும் வழக்கறிஞர்களும், ஆங்கிலம் அறிந்த காரணத்தாலேயே தம்மையும் உயர் குலத்தவராக கருதிக் கொள்ளும் வழக்கறிஞர்களும் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பதால் பாதிக்கப்படுபவர்கள். ஆனால் இவர்கள் பாதிக்கப்பட்டால் அது மக்களுக்கு நன்மையாகவே இருக்கும். ஏனென்றால் இந்த வகை வழக்கறிஞர்களின் ஆதிக்கத்தில் நீதித்துறை இருப்பதாலேயே ஏராளமான வழக்குகள் தேங்கும் நிலை ஏற்படுகிறது.

சட்டம், சமூகம் ஆகியவை குறித்த ஆழ்ந்த அறிவிருந்தும் சரளமான ஆங்கிலப்புலமை இல்லாததால் பெரும்பாலான வழக்கறிஞர்கள் ஆங்கிலம் நன்கறிந்த வழக்கறிஞர்களை நாடும் நிலை உள்ளது. இதனால் ஆங்கிலம் நன்கறிந்த வழக்கறிஞர்களின் பணிச்சுமை அதிகரித்து பாதிக்கப்படும் மக்களுக்கான உரிமைகளை உடனே பெற்றுத்தராமல், அம்மக்களை அந்த அநீதிக்குள் பல காலம் வாழுமாறு நிர்ப்பந்தப் படுத்துகிறது.

இந்த அவல நிலையை மாற்றவதில், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கும் செயல் முக்கிய பங்கு வகிக்கும். தமிழ் நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கப்பட்டால் அனைத்து வழக்கறிஞர்களும் நேரடியாக நீதிமன்றத்தில் வழக்காடுவார்கள். எனவே மக்கள் நலன் நாடும் வழக்குகளில் தேவையின்றி காலநீட்டிப்பு (வாய்தா) பெற வேண்டிய அவசியம் இருக்காது. தாமதித்து வழங்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று வசனம் பேசிக்கொண்டே அந்த அநீதியை தொடர்ந்து இழைத்து வரும் நீதித்துறை திருந்தும் காலம் வரும்.
சுருக்கமாக கூறினால் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது மொழி வளர்ச்சிக்கான செயல்பாடு மட்டுமே அல்ல. இது கடைக்கோடி மனிதனுக்கும் சமூக நீதி உள்ளிட்ட மனித உரிமைகளை கொண்டு சேர்க்கும் அருமையான வாய்ப்பாகும். அரசின் கடப்பாடுகளை வலியுறுத்தி உரிமைகளை பெறவும், ஊழலற்ற நிர்வாகத்தை கட்டமைக்கவும் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது மிகவும் முக்கியமான செயல்பாடாகும்.

இந்தியாவின் குடியரசு உண்மையிலேயே மக்களுக்காக, மக்களால் கட்டமைக்கப்பட்ட குடியரசு என்பது உண்மையானால் தமிழ் மட்டுமல்ல – அனைத்து மாநில மக்களும் அந்தந்த மாநில மொழிகளை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தும் நிலை ஏற்பட வேண்டும்.


தொகுப்பு :
டாக்டர் மு.பாண்டியராஜன் 
மனித உரிமைகள் பாதுகாப்பு கழகம் - (international)
Email: hrdointernational@gmail.com



மனித உரிமைகள் - ஒரு அறிமுகம்


 முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றபோது வளர்ந்த மற்றும் பலம் மிகுந்த நாடுகளின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியானது சமூக சிந்தனையாளர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் அவை, உலகில் உள்ள அனைத்து மனித குலத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஆவணம் ஒன்றை உருவாக்கியது.
1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் "அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்" அறிமுகம் செய்யப்பட்டது.  உடனடியாக 58 உலக நாடுகள் இந்த பிரகடனத்தை அங்கீகாரம் செய்தன.
இந்த மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள் உள்ளன.


1. சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

2. ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.

3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.

4. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை.

5. சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை

7. பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள்.

8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.

9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.

10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை

11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.

12. தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.

14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.

15. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.

16. எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும்.

17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

19. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.

20. எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு.

21. அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

22. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை

23. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும் உரிமையுண்டு.

24. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.

25. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.

அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.

தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.

26. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.

27. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

28. மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபற்றும் உரிமை.

29. ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்.

30. இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது.



ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தின் இணைய தளத்தில் இந்த பிரகடனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பும் உள்ளது. 


இந்த மனித உரிமைப் பிரகடனத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் பணியில் பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.



எனினும் மனித உரிமைகள் குறித்து அனைத்து மக்களிடமும், போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மை.
மனித உரிமைகள் குறி்த்து மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேலும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கவும் உதவும். இதற்கான பணியில் கல்வி அறிவு பெற்ற அனைவரும் பங்கேற்க வேண்டும். 

மனித உரிமைகள் என்றால் என்ன?

மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம்.

மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது.

டி.டி பாசு அவர்கள் மனித உரிமைகளை வரையறுக்கும் பொழுது "எவ்வித மறுபயனுமின்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளே மனித உரிமைகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைப்பெற்ற மனித உரிமைகள் குறித்த உலக மாநாட்டின் பிரகடனத்தில் "மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அல்லது அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.

மனித உரிமைகளின் வகைகள்

மனித உரிமைகள் பொதுவாக பிரிக்கப்பட முடியாதவை. மேலும், அவை ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பவை. அதனால் பல்வேறு வகையான மனித உரிமைகள் இருப்பதற்கு சாத்தியமில்லை. முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், அனைத்து மனித உரிமைகளும் சமமான முக்கியத்துவத்தினை பெறுகிறது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் எவ்விதமான வகைப்பாடுகளும் காணப்படவில்லை. ஆனால் அதற்குப் பின்னர் ஐ.நாவின் உறுப்பு நாடுகள் மனித உரிமைகளை ஐந்து வகைகளாகப் பிரித்தது.

அவை :
1.குடிமையியல்
2.அரசியல் உரிமைகள்
3. பொருளாதார உரிமைகள்
4. சமூக உரிமைகள்
5. கலாச்சார உரிமைகள்

- மனித உரிமைகள் சட்டம்


தொகுப்பு :
டாக்டர் மு.பாண்டியராஜன் 
மனித உரிமைகள் பாதுகாப்பு கழகம் - (international)
Email: hrdointernational@gmail.com

மனித உரிமைகள்


மனித உரிமை

என்பது,எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். இந்த உரிமைகள் "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக" கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை.


பொருளடக்கம்

  • 1 அடிப்படை மனித உரிமைகள்
  • 2 வரலாறு
  • 3 மனித உரிமைகளின் மூலங்கள்
    • 3.1 இயற்கை உரிமைகள்
  • 4 சட்டங்களும் கருவிகளும்
    • 4.1 மனிதாபிமானச் சட்டம்
    • 4.2 உலக மனித உரிமைகள் சாற்றுரை

அடிப்படை மனித உரிமைகள்
எவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் International Covenant on Economic, Social and Cultural Rights என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம், கனடாவின் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்தி சட்டங்கள் உள்ளன. பின்வருவன இப்படி பல வெளிப்படுத்தல்களில் அடிப்படை மனித உரிமைகளாக கருதப்படுவையாகும்.
  • வாழும் உரிமை - Right to life
  • உணவுக்கான உரிமை - Right to food
  • நீருக்கான உரிமை - Right to water
  • கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்/பேச்சுரிமை
  • சிந்தனைச் சுதந்திரம்
  • ஊடகச் சுதந்திரம் - Freedom of the press
  • Freedom of information
  • சமயச் சுதந்திரம் (Freedom of religion)
  • அடிமையாகா உரிமை
  • சித்தரவதைக்கு உட்படா உரிமை
  • தன்னாட்சி உரிமை/சுயநிர்ணயம்
  • ஆட்சியில் பங்குகொள்ள உரிமை
  • நகர்வு சுதந்திரம்
  • கூடல் சுதந்திரம் - (Freedom of assembly)
  • Freedom of association
  • தன்னாட்சி உரிமை/சுயநிர்ணயம்
  • கல்வி உரிமை
  • மொழி உரிமை
  • பண்பாட்டு உரிமை
  • சொத்துரிமை
  • Privacy

வரலாறு

மனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது.

1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்".

பல தொன்மையான ஆவணங்களும், பிற்காலத்தில் சமயமும், மெய்யியலும் மனித உரிமைகள் எனக் கருதப்படக்கூடிய பல்வேறு கருத்துருக்களைத் தம்முள் அடக்கியிருந்தன. இவற்றுள், கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட நோக்கப் பிரகடனம்; கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியப் பேரரசனான அசோகன் வெளியிட்ட அசோகனின் ஆணை எனப்படும் ஆணையும்; கிபி 622 இல் முகமது நபியால் உருவாக்கப்பட்ட மதீனாவின் அரசியல் சட்டமும் குறிப்பிடத்தக்கவை. 1215 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்" (Magna Carta Libertatum) ஆங்கிலச் சட்ட வரலாற்றில் முக்கியமானது ஆகும். இதனால் இது இன்றைய அனைத்துலகச் சட்டம், அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவை தொடர்பிலும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

ஆனாலும், நவீன மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும், மனித உரிமை என்பதற்கான நவீன விளக்கங்களின் அடிப்படையும், ஒப்பீட்டளவில் அண்மைக்கால வரலாறாகும். 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக செருமனியில் வெளியிடப்பட்ட "கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்" (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரித்தானிய உரிமைகள் சட்டமூலம் என அழைக்கப்படும், "குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்", ஐக்கிய இராச்சியத்தில் பலவகையான அரசாங்க ஒடுக்குமுறைகளைச் சட்டத்துக்குப் புறம்பானவையாக ஆக்கியது.
1789 ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிரான்சின் தேசிய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை.

18 ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவிலும் (1776), பிரான்சிலும் (1789) இரண்டு முக்கிய புரட்சிகள் இடம்பெற்றன. இவற்றின் விளைவாக இரண்டு அறிக்கைகள் வெளியிடபட்டன. ஒன்று ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கை, மற்றது மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை. இரண்டுமே சில சட்டம் சார்ந்த உரிமைகளை நிலைநாட்டியிருந்தன. மேலும் 1776 ஆம் ஆண்டின் உரிமைகளுக்கான வெர்ஜீனியா அறிக்கையும் பல அடிப்படை உரிமைகளைச் சட்டத்தில் இடம்பெறச் செய்தது.

எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களைப் படைத்தவன் உயிர்வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்ற அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகள் சிலவற்றை அவர்களுக்கு அளித்துள்ளான் என்னும் உண்மைகள் தாமாகவே விளக்கம் பெறுகின்றன எனக் கொள்கிறோம்.
—ஐக்கிய அமெரிக்க விடுதலைக்கான அறிக்கை, 1776

இவற்றைத் தொடர்ந்து 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில், தாமசு பைன், ஜான் இசுட்டுவார்ட் மில், ஜி டபிள்யூ. எஃப். கேகெல் போன்றோரால் மனித உரிமைகள் தொடர்பான மெய்யியல் வளர்ச்சி பெறலாயிற்று.
20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் பல குழுக்களும், இயக்கங்களும் மனித உரிமையின் பெயரால் பலவகையான சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. மேற்கு ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, மிகக்குறைந்த வேலை நிலைமைகளை நிலைநாட்டுதல், சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்துதல் போன்ற உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. பெண்ணுரிமை இயக்கங்களால் பல நாடுகளில் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. நாட்டு விடுதலை இயக்கங்கள் பல குடியேற்றவாத அரசுகளை வெளியேற்றி விடுதலை பெற்றுக்கொண்டன. இவற்றுள் மகாத்மா காந்தியின் தலைமையிலான இந்திய விடுதலைப் போராட்டம் முக்கியமானது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் "லீபர் நெறிகள்" 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.

உலகப் போர்களும், அவற்றினால் விளைந்த உயிர்ச் சேதங்கள், மனித உரிமை மீறல்களும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் வளர்ச்சிபெறத் தூண்டுதலாக அமைந்தன. முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வெர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் நாடுகள் சங்கம் உருவானது. இச் சங்கம், ஆயுதக் களைவு; கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராசதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது.

இச் சங்கத்தின் பட்டயத்தில் இச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவேண்டிய பல உரிமைகள் குறித்த ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வுரிமைகள் பின்னர், இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டன.
1945 ஆம் ஆண்டின் யால்ட்டா மாநாட்டில், நாடுகளின் சங்கத்தின் பணிகளை முன்னெடுப்பதற்குப் புதிய அமைப்பொன்றை உருவாக்க கூட்டு வல்லரசுகள் இணங்கின. இதன் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் இவ்வமைப்பு பெரும் பங்கு ஆற்றியுள்ளது. உலகப் போர்களைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்பு நாடுகளும் ஈடுபட்ட கலந்துரையாடல்களும், உருவாக்கிய சட்ட அமைப்புக்களுமே இன்றைய அனைத்துலக மனிதாபிமானச் சட்டம், அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் என்பவற்றில் உள்ளடங்கியுள்ளன.

மனித உரிமைகளின் மூலங்கள்

மனித உரிமைகளின் மூலங்கள், ஆதாரங்கள் அல்லது நியாப்படுத்தல் மனித உரிமைகளின் இருத்தல் பற்றியும், அவற்றைப் பேணுவதன் அவசியம் பற்றி, அல்லது மனித உரிமை கோட்பாட்டின் போதாமைகள் பற்றி சுட்டிக் காட்டுகின்றன.

இயற்கை உரிமைகள்

மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்தால் அவர்களுக்கு இயல்பாக, இயற்கையாக இருக்கும் உரிமைகள் என்பது மனித உரிமைகளின் மூலம் பற்றிய ஒரு தத்துவ நோக்கு ஆகும்.

சட்டங்களும் கருவிகளும்

மனிதாபிமானச் சட்டம்

1864 ஆம் ஆண்டின் செனீவாச் சாற்றுரையின் மூலப்பிரதி.

அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனரான என்றி துரந்த்தின் முயற்சிகளின் விளைவாக 1864 ஆம் ஆண்டுக்கும் 1907 ஆம் ஆண்டுக்கும் இடையில் செனீவாச் சாசனம் உருவானது. இச் சாசனம் ஆயுதப் போர்களில் ஈடுபடும் தனியாட்களது மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தை உடையது. இது அனைத்துலகச் சட்டத்தில் போர், போர்க் குற்றங்கள் என்பன தொடர்பான சட்டங்களை முறைப்படுத்துவதற்கான முதல் முயற்சியாக அமைந்த 1899, 1907 ஆம் ஆண்டுகளின் ஏக் சாசனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் விளைவாக இச் சாசனம் திருத்தப்பட்ட பின்னர் 1949 ஆம் ஆண்டில் மீண்டும் உலக சமுதாயத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.

செனீவா சாசனம், இன்று மனிதாபிமானச் சட்டம் எனக் குறிக்கப்படும் சட்டத்தை வரையறுக்கிறது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவே செனீவாச் சாசனத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும்.

உலக மனித உரிமைகள் சாற்றுரை

"இது ஒரு ஒப்பந்தம் அல்ல...[எதிர் காலத்தில், இது] உலகத்தின் சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம் ஆக உருவாகக் கூடும்." 1949 ஆம் ஆண்டில், உலக மனித உரிமைகள் சாற்றுரையின் எசுப்பானிய மொழிப் பிரதியுடன் எலினோர் ரூஸ்வெல்ட்.

உலக மனித உரிமைகள் சாற்றுரை என்பது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நிறைவேற்றப்பட்ட கட்டுப்படுத்தாத ஒரு சாற்றுரை ஆகும். 1949 ஆம் ஆண்டில் இச் சாற்றுரை உருவாக்கப்பட்டதற்கு இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற அட்டூழியங்களும் ஒரு காரணமாகும். இது ஒரு கட்டுப்படுத்தாத சாற்றுரையாக இருப்பினும் தற்போதைய அனைத்துலக மரபார்ந்த சட்டத்தின் முக்கியமான கூறாக இது கருதப்படுகிறது. நாடுகளால் அல்லது பிற நீதித் துறைகளினால் பொருத்தமான வேளைகளில் இதனைப் பயன்படுத்த முடியும். விடுதலை, நீதி, உலக அமைதி என்பவற்றுக்கு அடிப்படையாக அமைபவை என்ற வகையில் சில மனித, குடிசார், பொருளாதார, சமூக உரிமைகளை முன்னெடுக்குமாறு உறுப்பு நாடுகளை இச் சாற்றுரை வேண்டுகிறது. நாடுகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் குடிமக்கள் பால் அவற்றுக்கு இருக்கக்கூடிய கடமைகளைச் செய்யுமாறு தூண்டும் முதலாவது உலகச் சட்டம் சார்ந்த முயற்சி இச் சாற்றுரை ஆகும்.


தொகுப்பு :
டாக்டர் மு.பாண்டியராஜன் 
மனித உரிமைகள் பாதுகாப்பு கழகம் - (international)
Email: hrdointernational@gmail.com


உலக மனித உரிமைகள் சாற்றுரை



உலக மனித உரிமைகள் சாற்றுரை (Universal Declaration of Human Rights) என்பது, 
1948 ஆம் ஆண்டில் பாரிசில் உள்ள சைலட் மாளிகையில் வைத்து, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாற்றுரை ஆகும். கின்னஸ் பதிவுகள் நூல், இதனை மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் எனக் குறிப்பிடுகிறது. இச் சாற்றுரை இரண்டாம் உலகப் போரில் இருந்து பெற்ற பட்டறிவுகளிலிருந்து உருவானது. அத்துடன், ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே உரித்தாக உள்ள உரிமைகள் பற்றிய உலகளாவிய வெளிப்பாடும் இதுவே. இச் சாற்றுரையில் 30 பிரிவுகள் உள்ளன. இவை பின்னர் உருவாக்கப்பட்ட அனைத்துலக ஒப்பந்தங்கள், பிரதேச மனித உரிமைகள் ஆவணங்கள், தேசிய அரசியலமைப்புச் சட்டங்கள், பிற சட்டங்கள் என்பவை மூலம் விரிவாக்கப்பட்டன. மனித உரிமைகள் அனைத்துலகச் சட்டவிதி, அனைத்துலக மனித உரிமைகள் சாற்றுரையையும்; பொருளியல், சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம்குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் ஆகிய ஆவணங்களையும்; அதன் விருப்பத்தின் பேரில் கைக்கொள்ளக்கூடிய இரண்டு நடவடிக்கை விதிகளையும் உள்ளடக்கியுள்ளது.


உறுப்புரைகள்


  1. நாம் அனைவரும் சுதந்திரமாகவும் உரிமைகளில் சமமாகவும் பிறக்கிறோம்
  2. இன, நிற, பால், மொழி, சமய, அரசியல் கருத்து, தேசியம், சொத்து, பிறப்பு பாகுபாடு காட்டேதே
  3. வாழ்வு உரிமை
  4. யாரும் அடிமை இல்லை
  5. யாரும் சித்தரவதைக்கு உட்படலாகது
  6. எவ்விடத்திலும் ஒருவருக்கு உரிமைகள் உண்டு
  7. சட்டத்தின்முன் சமவுரிமை
  8. நியாமற்று தடுத்துவைக்கமுடியாது
  9. நீதியான வழக்குக்கான உரிமை
  10. குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி
  11. அந்தரங்க உரிமை
  12. நகர்வுச் சுதந்திரம்
  13. துன்புறுத்தலிலிருந்து புகலிட உரிமை
  14. தேசியத்துக்கான உரிமை
  15. திருமணம் குடும்பம் செய்ய சுதந்திரம்
  16. ஆதன உரிமை
  17. சிந்தனை சுதந்திரம், உள்ளுணர்வு சுதந்திரம், சமயச் சுதந்திரம்
  18. கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம்
  19. கூடல் சுதந்திரம்
  20. மக்களாட்சி உரிமை
  21. சமூக பாதுகாப்பு உரிமை
  22. தொழிலாளர் உரிமைகள்
  23. விளையாட, ஓய்வெடுக்க உரிமை
  24. உணவுக்கும் உறையுளுக்குமான உரிமை
  25. கல்விக்கான உரிமை
  26. பண்பாட்டு பங்களிப்பு உரிமை, ஆக்கவுரிமை
  27. நியாமான விடுதலை பெற்ற உலகு
  28. பொறுப்புகள்
  29. மனித உரிமைகளை யாரும் பறிக்கமுடியாது


    தொகுப்பு :
    டாக்டர் மு.பாண்டியராஜன் 
    மனித உரிமைகள் பாதுகாப்பு கழகம் - (international)
    Email: hrdointernational@gmail.com

நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு சட்ட முன்வரைவு 2011

சமீபத்தில் அவதார் என்ற உலக அளவில் பெயர் பெற்ற ஆங்கில திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் வேற்று கிரகவாசிகளின் நிலத்தையும் அவர்களின் பண்பாட்டையும் அழிக்க முயற்சிக்கும் அமெரிக்கப் படைகளை எதிர்த்து உக்கிரமான போர் நடைபெறும். போரின் இறுதியில் அந்த கிரகத்தின் மக்கள் வெற்றி பெறுவார்கள். இது ஏதோ ஒரு வகையில் பன்னாட்டு கம்பெனிகள் பழங்குடி மக்களின் மற்றும் விவசாயிகளின் நிலங்களை பறிமுதல் செய்வதை எதிர்த்து உலகம் முழுவதும் நடைபெறும் போரட்டங்களை பிரதிபலித்தது என்பதால் அத்திரைப்படம் வெற்றி பெற்றது. அவதார் நிகழ்வுகள் நாடு முழுவதும் உலகமயமாக்கல், பொருளாதார கொள்கைகள் அமல்படுத்த துவங்கியதிலிருந்தே நடைபெறத் தொடங்கி விட்டன. மேற்கு வங்கத்தில், சட்டிஸ்கரில், ஜார்கண்டில் என இப்போராட்டங்கள் கண்முன் சாட்சியங்களாக இருக்கின்றன. இப்போராட்டங்களில் போஸ்கோ திட்டத்தை எதிர்த்து நடைபெறும் மக்களின் எழுச்சி மிக்க போராட்டமும் அதற்கான ஆதரவு அலையும் அம்மாநில அரசையும் நடுவண அரசையும் ஆட்டங்காண வைத்துள்ளது. இதன் எதிர்வினையாக சட்டவிரோதமாக செய்து வந்த நில பறிப்பை அல்லது கையகப்படுத்துதலை மற்றும் ஆக்கிரமிப்பை சட்டபடியே செய்ய நடுவண அரசு துணிந்து விட்டதாகவே தெரிகிறது. 
நடுவண அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுவாழ்வு குடியமர்வு சட்ட முன்வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டிலுள்ள இது தொடர்பான மூலச்சட்டமான நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1984ல் காலனியாதிக்கவாதிகளால் இயற்றப்பட்டது. அச்சட்டம் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளதால் இப்புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்மயமாக்குதல், அடிப்படை கட்டுமானம் மற்றும் நகரமயமாக்கலுக்குத் தேவையான நிலங்களை கையயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதே சமயத்தில் விவசாயிகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கு நிலங்களையே சார்ந்து இருக்கக்கூடியவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதில் வெளியேற்றப்படுபவர்களுக்கு மறுவாழ்வு/மறு குடியமர்வு வழங்கும் முதல் தேசிய சட்டமாகும் என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கப்பட்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய விவசாயிகளின் அமைப்புகள் ஒருங்கிணைந்து கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் கூறப்படுவதாவது:
 முதலாவது சட்டத்தில் பொது நோக்கம் என்பதே கிராமப்புறங்களை வளர்ச்சியடையச்செய்வது, அதன் சுற்றுச்சூழலை பாதுகாப்பது; நிலத்தை இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதாக இல்லை. மாறாக கிராமப்புறங்களையும் விவசாயத்தையும் அழித்து தொழில்மயமாக்குவதாகவும் நகரமயமாக்குவதாகவும் உள்ளது. விவசாயம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையில்லை என்றும் தொழிற்சாலைகள்தான் அவசியம் என்றும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இது பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அவர்களின் நலன்களை தலை மேல் தாங்கி பூர்த்தி செய்ய காட்டும் அவசரமாகவே தெரிகிறது.
 100ஏக்கருக்கு குறைவாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருந்தால் நட்ட ஈடோ அல்லது மறுவாழ்வோ அல்லது மறுகுடியமர்வோ கிடையாது.
 உணவு உற்பத்திக்கும் நாட்டின் உணவு பாதுகாப்பிற்கும் பேரழிவு ஏற்படும் வகையில் விவசாய நிலங்களை தொழிற்சாலைகளை மாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.
 இச்சட்டத்தில் தம்பட்டம் அடித்துக்கொள்வது போன்று விவசாயிகள் வெளியேற்றப்படுவதை தடுத்திடவோ அல்லது குறைத்திடவோ எந்த பிரிவும் இல்லை.
 விவசாய நிலங்களை அடிமாட்டுவிலைக்கு வாங்கிட பணபலம், அடியாள் பலம் உள்ளிட்ட அதிகாரத்துடன் நடைபெறும் பேரங்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திட சட்டத்தில் எந்தப் பிரிவும் இல்லை.
 மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு அளித்திடுவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. விவசாய நிலத்தை இழந்து நிற்பவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கருணையின் அடிப்படையில் நட்ட ஈடோ அல்லது மறுவாழ்வோ அளித்தால் தான் உண்டு. அதுமட்டுமின்றி நிலத்தை விற்க முடிவெடுப்பதில் விவசாயிகளுக்கோ பழங்குடியினருக்கோ எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.
ஆக ஒட்டு மொத்தமாக நாட்டின் விளைநிலங்களையும் வளங்களையும் சட்டப்பூர்வமாகவே பன்னாட்டு கம்பெனிகளுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அடகுவைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது விவசாயிகளின் கழுத்தில் வைக்கப்பட்டுள்ள கத்தி நாளை கடற்கரை நிலங்களிலிருந்து மீனவர்களை விரட்டியடித்திட வைக்கப்படும் என்பது நிச்சயம்.

தொகுப்பு :
டாக்டர் மு.பாண்டியராஜன் 
மனித உரிமைகள் பாதுகாப்பு கழகம் - (international)
Email: hrdointernational@gmail.com

தற்கொலையைத் தவிர்ப்போம்


இந்தியாவில் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விஷம் அருந்துதல் அல்லது உடலுக்கு தீ வைத்தல் அல்லது தூக்கில் தொங்குதல் அல்லது உயரமான இடத்திலிருந்து குதித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது உயிரை மாய்த்துக்கொள்வதாகவும், 1980லிருந்த தற்கொலை விகிதத்தை விட 2006இல் பதிவான தற்கொலை விகிதம் 67% அதிகம் என்றும், அதிகப்படியான தற்கொலைகள் ஆண்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் நிகழ்வதாகவும், அதே போல 2006ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 41% சுய தொழில் செய்பவர்கள், 21.2% இல்லத்தரசிகள், 11.5% பணியில் இருப்பவர்கள், 7.5% வேலையற்றோர், 5% மாணாக்கர்கள், 0.9% பணியிலிருந்து ஒய்வுபெற்றோர், 12.8% இதர பிரிவினர்கள் என்றும், மேலும் 2006இல் இந்தியாவில் பதிவான தற்கொலைகளில் 2.5 விழுக்காடு தமிழ்நாட்டில் நிகழ்ந்தவைகள் ஆகும் என்றும் “தேசிய குற்ற பதிவுகள் கழகம்” தனது அறிக்கையில் கூறுகிறது. 
தற்கொலைக்கான காரணங்கள்: 
      மன அழுத்தம், மன சிதைவு, உளவியல் நோய்கள், சமூக கலாச்சார அழுத்தங்கள், காதல் தோல்வி, வறுமை, கடன், அளவுகடந்த பேரச்சம், ஈடு செய்யமுடியாத இழப்பு, தாங்கிக்கொள்ள முடியாத வலி, பெருந்துயரம், கடுமையான சித்திரவதைகள், மது மற்றும் போதைக்கு அடிமையாதல், பிடித்தமானவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கு குற்ற மனப்பான்மையை உண்டாக்கவும், தேர்வில் தோல்வி, நம்பிக்கையற்ற நிச்சயமற்ற தன்மையை உணர்தல், வாழத் தகுதியற்றவர் என்ற நிலையை உருவாக்குதல், பொது பிரச்சனைகளில் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடலுக்குத் தீவைத்தல், தான் சார்ந்த அரசியல் கட்சியின் தலைமைக்காக, நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக,வகுப்பறை வன்முறை, ஒதுக்கி வைத்தல் மற்றும் குற்ற உணர்ச்சி என்பது போன்ற பல்வேறு காரணங்களில் ஏதாவது ஒன்றிற்காக பொதுவாக தற்கொலைகள் நிகழ்கின்றன. 
மதங்களும் தற்கொலைகளும்: 
     “அகித்தொப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம் பண்ணினார்கள்.” என்று புனித வேதாகமத்தின், 2 சாமுவேல் அதிகாரம் 17, வசனம் 23லும்,
      “அப்பொழுது அவன் (யூதாஸ்) அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்து விட்டு, புறப்பட்டுபோய், நான்று கொண்டு செத்தான்” என்று மத்தேயு அதிகாரம் 27, வசனம் 5ல் கூறப்பட்டுள்ளது. 
      இருப்பினும் கிறித்தவம், இந்து, இசுலாம், சீக்கியம், யூதம் மற்றும் புத்த மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களுமே தற்கொலைகளை கண்டிக்கின்றன. 
வரலாற்றில் தற்கொலைகள்: 
      சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய, வீரமங்கை வேலு நாச்சியாரிடம் பணிப்பெண்ணாகயிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த குயிலி என்பவரும், அதை ஒட்டிய காலகட்டத்தில், நெல்லைச் சீமையில் கட்டபொம்மனிடம் தளபதியாகயிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த வீரன்சுந்தரலிங்கம் என்பவரும், நாட்டின் விடுதலைப்போரில் தற்கொலை செய்துகொண்டதாக தமிழக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மன்னர் சேதுபதி இறந்தபோது அவரது தகனத்தின் போது, அவரது மனைவிகள் 56 பேரும் அந்த நெருப்பில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது வரலாறு. ஈழ மக்கள் தங்களின் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து தற்கொலைப் படையை உருவாக்கினார்கள். 
இந்திய தண்டனைச் சட்டம்,1860
பிரிவு:305. குழந்தையின் அல்லது பைத்தியம் பிடித்தவரின் தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்:  
      “18 வயதுக்குட்பட்ட அல்லது பைத்தியம் பிடித்த அல்லது, வெறி பிடித்த அல்லது, அறிவிலி அல்லது குடி போதையிலிருக்கும் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால், அத்தகைய தற்கொலை செய்துகொள்ளப்படுவதற்கு உடந்தையாயிருக்கிற எவரொருவரும், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டணையோ அல்லது பத்து ஆண்டுகள்வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச் சிறைதண்டனையோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”. 
பிரிவு:306. தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்:  
     “ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அத்தகைய தற்கொலை செய்து கொள்ளப்படுவதற்க்கு உடந்தையாயிருக்கிற எவரொருவரும் பத்து ஆண்டுகள் வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச் சிறைதண்டனை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”. 
பிரிவு:309. தற்கொலை செய்துகொள்ள முயற்சி:  
      “தற்கொலை செய்துகொள்ள முயல்கிற மற்றும் அத்தகைய குற்றம் செய்ய ஏதாவது ஒரு செயலைச் செய்கிற எவரொருவரும், ஓர் ஆண்டு வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்கு மெய்காவல் தண்டனையோ அல்லது அபராதமோ விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்”. 
இந்திய அரசியல் சாசனம்,1950
சரத்து:21. “சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும், ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக்கூடாது”. 
இந்திய சட்ட ஆணையத்தின் 42ஆவது அறிக்கை: 
1971ம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட இந்திய சட்ட ஆணையத்தின் 42ஆவது அறிக்கையானது, “தன்னளவில் மனரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவர்தான் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவருக்கு அளிக்கப்பட வேண்டியது ஆற்றுப்படுத்துதலே தவிர தண்டனை அல்ல. அப்படியாக தண்டனை அளிப்பதென்பது ஒருவருக்கு இருமுறை தண்டனை அளிப்பது போன்றதாகும். எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309 நீக்கப்பட வேண்டும்” என்று பரிந்துரை செய்துள்ளது. 
தற்கொலை தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்புகள்: 
     1986ஆம் ஆண்டு, ‘தற்கொலை செய்துகொள்வதும் அடிப்படை உரிமையே’ என்ற வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, முதன்முறையாக ஒரு விசித்திரமான வழக்கு நீதிமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 
மும்பை நகர காவல்படையைச் சேர்ந்த காவலரும், மனநலம் பாதிக்கப்பட்டவருமான ‘மாருதி ஸ்ரீபதி துபால்’ என்பவர், தனது வாழ்வாதாரத் தேவைக்காக ஒரு கடை வைத்துக்கொள்ளக் கோரியிருந்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஏற்பட்ட மன அழுத்ததின் விளைவாக, மாநகராட்சி அலுவலக அறைக்குள் தனக்குத்தானே நெருப்பு வைத்து தீக்குளிக்க முயன்றார். இதனால் அவர் மீது, தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்ற குற்றத்தின்படி வழக்குபதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். 
அவரது தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட மும்பை உயர்நீதிமன்றம், ‘தற்கொலை செய்து கொள்வதற்கான விருப்பமானது இயற்கையானதல்ல, ஆனால் அதேவேளையில் அது சாதாரணமானதோ, பொதுவானதோ அல்ல. மேலும் நோய், வாழ்வில் தாங்கிக் கொள்ளமுடியாத நிலைகள், கொடுமைகள், அவமானமான சூழல்கள் மற்றும் புத்தி சுவாதீனமில்லா நிலை போன்ற பல்வேறு நிலைகளில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள எண்ணம் கொள்கிறார். எனவே இந்திய அரசியல் சாசனத்தின் சரத்து 21ல் வகுத்துரைக்கப்பட்டுள்ள, உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தனது உயிரை தானே மாய்த்துக்கொள்வதற்கான உரிமையும் உள்ளடங்கும் என்றும், தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்பது தண்டனைக்குரிய தனிக்குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ள, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது’ என்றும் அறிவித்தது. 
ஆனால் 1987ஆம் ஆண்டு, இதற்கு முற்றிலும் புறம்பாக ஆந்திரபிரதேச உயர் நீதிமன்றமானது, ‘சென்னா ஜெகதீஸ்வர்’ என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தற்கொலை செய்துகொள்வது உள்ளடங்காது என்றும், தற்கொலை செய்துகொள்வதற்கு தண்டனை வரையறுக்கப்பட்டுள்ள, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது அல்ல என்றும் தீர்ப்பிட்டது. 
 தற்கொலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்: 
மேற்கண்ட தீர்ப்பினை 1994ஆம் ஆண்டில் பி.ரத்தினம் என்பவர் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. 
தற்கொலை செய்து கொள்வது உரிமை என்றும், உரிமை இல்லை என்றும் வழங்கப்பட்ட தீர்ப்புகளினால் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து இறுதியாக, 1996ஆம் ஆண்டு,கியான் கவுர்’ என்பார் தொடர்ந்த வழக்கில், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்திற்கெதிராக தொடரப்பட்டிருந்த 6 வழக்குகளை ஒன்றாக இணைத்து,தற்கொலை செய்வது ஒருவரின் அடிப்படை உரிமை அல்ல என்றும், இந்திய அரசியல் சாசனத்தின் சரத்து 21ல் வகுத்துரைக்கப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தனது உயிரைத் தானே மாய்த்துக்கொள்வதற்கான உரிமை உள்ளடங்காது என்றும், தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்பது தண்டனைக்குரிய தனிக்குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ள, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது அல்ல” என்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய ஆயம் விரிவாக விவாதித்து, தீர்ப்பிட்டது. இதே தீர்ப்பினை கடந்த 2011 மார்ச் மாதத்தில், கருணைக் கொலை தொடர்பான, பரவலாகப் பேசப்பட்ட ‘அருணா ராமசந்திரா ஷன்பக்’ என்ற வழக்கிலும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 
தற்கொலையைத் தவிர்க்க சில வழிகள்: 
வறுமை மற்றும் பெரும்கடன் சுமைகளின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாட்டில் பெருகிக்கொண்டே வருகிறது. இதில் மத்திய மாநில அரசுகள், உடனடியாக தலையீடு செய்து, தொடரும் இந்த அவலநிலைகளைப் போக்கிடும் வகையிலான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். 
தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கொண்டோர் தனிமையை தவிர்த்தல் வேண்டும். பிடித்தமானவர்கள், நண்பர்கள் போன்றவர்களுடன் அதிகமாக பகிர்ந்துகொள்ளுதல், பிரச்சனைகளின்போது தனக்குப் பிடித்தமான பொம்மைகள் அல்லது கண்ணாடி முன்பாக நின்றுகொண்டு பேசிக்கொள்வது போன்ற வழிகளில் கவனத்தை தனக்குத்தானே மாற்றிக்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம். 
தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையில் உள்ளவர்களிடம், எந்த காரணத்தைக் கொண்டும் அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடுதலை தவிர்த்தல் மற்றும் அவர்களுக்கு அறிவுறைகள் வழங்குதல், அவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுதல் போன்றவைகள் தவிர்க்கப்படல் வேண்டும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். உயிரை மாய்த்துக்கொள்வது மட்டுமே, எந்த ஒரு பிரச்சனைக்கும் நிரந்தரமான தீர்வு அல்ல என்ற திடமான கருத்தை கல்வி, பாட திட்டங்கள், விளம்பரங்கள், குறும்படங்கள், பயிற்சிகள் என்பது போன்ற பல்வேறு வழிகளில் சிறு வயதிலிருந்தே தொடர்ந்து உறுதிபடுத்துதல். போராட்டமே வாழ்க்கை என்பதைப் புரியவைத்தல், ஆற்றுப்படுத்துதல் மையங்களுக்கு அழைத்துச் செல்லுதல் வேண்டும். 
ஒவ்வொரு மனித உயிரும் விலை மதிப்பற்றது. நாட்டின் ஒட்டுமொத்த சொத்தையும் விற்றாலும் அதன் மூலமாக ஒரே ஒரு மனித உயிரைக்கூட உருவாக்கம் செய்யவோ, விலைக்கு வாங்கவோ முடியாது என்பது பட்டவர்த்தமான உண்மை. எனவே, மத்திய மாநில அரசுகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்து பிரிவினருக்கும் ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாட்டில் பகிர்வுக்கும், ஆற்றுப்படுத்துவதற்கும் சரியான துணையில்லை என்ற காரணத்தால் நிகழும் தற்கொலைகளை என்ன சொல்லி நியாயபடுத்தப்போகிறோம். ஒருவருக்கு வேறு எதைக் கொடுப்பதைவிடவும், ஏதோ ஒரு வகையில் அவரது வாழ்வின் மீதான பிடிப்பையும், நம்பிக்கையையும் கொடுப்பதே மிகச்சிறந்த ஈகையாகும். இது போன்றவைகளின் வாயிலாக நிகழவிருக்கும் தற்கொலைகளைத் தவிர்ப்போம்.

தொகுப்பு :
டாக்டர் மு.பாண்டியராஜன் 
மனித உரிமைகள் பாதுகாப்பு கழகம் - (international)
Email: hrdointernational@gmail.com


இந்தியாவில் ஆண்டுக்கு 1000 கௌரவ கொலைகள்


குடும்ப கௌரவம் என்ற பெயரில் இந்தியாவில் ஆண்டுக்கு 1,000 பேர் கொலை செய்யப்படுவதாக அண்மையில் வெளியான புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
      
 பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆண்டுக்கு 900 பேரும், இதர மாநிலங்களில் 100 முதல் 300 பேரும் கொலை செய்யப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் மத்திய அரசு மற்றும் எட்டு மாநில அரசுகள் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
     
  இதனிடையே, கௌரவக் கொலைகளைத் தடுக்க குறிப்பிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 1872, சிறப்புத் திருமணங்கள் சட்டம் 1954 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சட்ட நிபுணர்கள் குழுவின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்ட வரைவு சட்ட திருத்தங்கள் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனையில் உள்ளன.
      
 தில்லி வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பிரிவு 300, 354-ல் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    
   பிரிவு 300-ல் குடும்ப கௌரவக் கொலையை 5-வது பகுதியாகக் சேர்க்கப்பட உள்ளது. கௌரவக் கொலைகளில் ஈடுபடும் நபர் அல்லது நபர்கள், குடும்பம், ஜாதிவாரி அமைப்பு, சமுதாய அமைப்பு, ஜாதி பஞ்சாயத்து என யாராக இருந்தாலும் இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். குடும்பத்தினரின் விருப்பத்துக்கு எதிராக ஜாதி, சமுதாயம் மாறி திருமணம் செய்துக் கொள்பவர்களை கொலை செய்வது, குடும்பம், சமுதாயம், பஞ்சாயத்து அமைப்புகள் ஏற்றுக் கொள்ளாத திருமணத்துக்காக ஒருவரைக் கொலை செய்வது ஆகியவையும் சட்டப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
     
  புதிய சட்டத் திருத்தத்தின்படி, கௌரவக் கொலைகளில் குற்றம் சாட்டப்படும் ஜாதிவாரி, சமுதாய அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் கொலை வழக்கில் எதிரிகளாகச் சேர்க்கப்படுவர்.
    
   மேலும், சாட்சி சட்டம் பிரிவு 105-ல் புதிய பகுதி சேர்க்கப்பட உள்ளது. இதே போல், சிறப்புத் திருமண சட்டத்தில் நீதிமன்ற நோட்டீஸ்க்கு எதிரிகளுக்கு அளிக்கப்படும் 30 நாள்கள் அவகாசத்தை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

      இந்திய தண்டனைச் சட்டத்தில் கௌரவக் கொலையை சேர்ப்பதில் மத்திய அமைச்சர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
    
   பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கௌரவக் கொலைகள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, வெவ்வேறு விதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதால் சட்ட திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

தொகுப்பு :
டாக்டர் மு.பாண்டியராஜன் 
மனித உரிமைகள் பாதுகாப்பு கழகம் - (international)
Email: hrdointernational@gmail.com



வன்கொடுமை வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு


மாண்பு உச்ச நீதிமன்றம், புது டில்லி

நீதிபதிகள்: மார்கண்டேய கட்ஜு & கியான் சுதா மிஸ்ரா

மேற்கோள்: 2011 -1- L.W. (Crl) 677 : (2011) 3 MLJ (Crl) 551(SC) தீர்ப்பு நாள்: 19.04.2011

ஆறுமுகம் சேர்வை & அஜித் குமார் ........ மேல்முறையீட்டாளர்கள்
 எதிர்
தமிழ்நாடு அரசு ......... எதிர் மனுதாரர்

தீர்ப்புரை

“ஒவ்வொரு அணுவிலும் ஒரு பகுதி இருளே; ஒரு யுகத்தின் கோப்பையை ஏந்துபவனே, இது குற்றங்களின் காலம்”. – - ஃபிராக் கோரக்புரி
“அனைத்து மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்; மனிதர்கள் வாழ்வு, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியாக இருக்க விழைவது போன்றவைகளை உள்ளடக்கிய, விட்டுக்கொடுக்க முடியாத உரிமைகளுடன் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் வெளிப்படையான உண்மைகளாகக் கொள்கிறோம். - அமெரிக்க சுதந்திர பிரகடனம், 1776

1.தாமஸ் ஜெஃபர்சன் என்பார் எழுதிய நினைவில் கொள்ளத்தக்க மேற்கண்ட வரிகள், இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த பிறகும், இன்றளவும் வரலாற்றில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இந்திய சமூகத்தின் ஒரு பெரும் பிரிவினர், தங்களின் சொந்த நாட்டு மக்களின் ஒரு பிரிவினரை இன்றளவும் தாழ்வாகக் கருதும் நிலையே நீடிக்கிறது. மேற்கண்ட மனநிலையானது இந்த நவீன யுகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் நாட்டின் வளர்ச்சியில் மந்த நிலையை ஏற்படுத்தும் காரணங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.

2.அனுமதி அளிக்கப்பட்டது.

3.மதுரை 4ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தால் பகரப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, குற்றவியல் மேல்முறையீடு (எண்.536&537/2001) செய்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 25.01.2008அன்று அத்தீர்ப்பை உறுதி செய்து அளித்த தீர்ப்புக்கு எதிராக, இந்த மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

4. கடந்த, 01.07.1999அன்று, கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது, மாடுகட்டும் முறை குறித்து, முதல் சாட்சி பன்னீர்செல்வம் மற்றும் இரண்டாம் சாட்சி மகாமணி ஆகிய இருவருக்கும் மேல்முறையீட்டாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் மேல்முறையீட்டாளரான ஆறுமுகம் சேர்வை, முதல் சாட்சியை, “நீ பள்ளப்பயல், செத்த மாட்டுக்கறியைத் தின்பவன்” என்று திட்டி அவமதிப்பு செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 1, 7 மற்றும் 9 ஆகியோர், முதல் சாட்சியின் இடது தோளில் கம்பால் அடித்து காயப்படுத்தியிருக்கிறார்கள். அப்போது இரண்டாம் சாட்சியான, மகாமணி இப்பிரச்சனையில் குறுக்கீடு செய்தபோது அவரையும் கம்பால் தாக்கியிருக்கிறார்கள். அதன் காரணமாக அவருக்குத் தலையில் முறிவும், கொடுங்காயமும் ஏற்பட்டுள்ளது.

5. காயமுற்ற நேரடி சாட்சிகளான மேற்கண்ட இருவரையும் தவிர, அந்த நிகழ்வில் மேலும் மூன்று நேரடி சாட்சிகளும் இருக்கின்றார்கள். காயமுற்றவர்களை மருத்துவர் பரிசோதனை செய்திருக்கிறார். மகாமணியின் தலையில் ஏற்பட்ட முறிவு, குற்றவாளிகளின் கொலை செய்யும் நோக்கத்தை உணர்த்துகிறது.

6. அரசு தரப்பின் வழக்கை இரண்டு நீதிமன்றங்களும் நம்புகின்றன. நிகழ்வு தொடர்பாக சாட்சிகளின் விவரிப்புகளை நாங்கள் மிகவும் கவனமுடன் பரிசீலனை செய்தபோதும், நிகழ்வை நம்பாமலிருக்க ஒரு காரணமும் தென்படவில்லை.

7. குற்றவாளி பிற்படுத்தப்பட்ட “சேர்வை” ஜாதியைச் சேர்ந்தவர். புகார்தாரர்களோ பட்டியலின “பள்ளன்” ஜாதியைச் சேர்ந்தவர்கள்.

8. “பள்ளன்” என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் குறிக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இதே வார்த்தை, ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் உபயோகபடுத்தப்பட்டு வருகிறது. (வட இந்தியாவில் “சமார்” என்ற வார்த்தை குறிப்பிட்ட ஒரு ஜாதியைக் குறிக்கும் அதேவேளையில், ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் அதே வார்த்தை பயன்படுத்தப்படுவதைப்போல). பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையில் ஒருவரை “பள்ளன்” என்று சொல்வது, எங்களது கருத்துப்படி, பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமாகும். தமிழ்நாட்டில், “பள்ளப்பயல்” என்று ஒருவரைச் சொல்வது இன்னும் கூடுதலாக அவமதிப்பு செய்வதாகும்; அது மேலும் பெரிய குற்றமாகும்.

9. அதேபோல, தமிழ்நாட்டில் “பறையன்” என்றொரு ஜாதி உள்ளது. ஆனால் அதே “பறையன்” என்ற வார்த்தை ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. “பறப்பறையன்” என்ற வார்த்தை மேலும் பெரிய அவமதிப்பாகும்.

10. பள்ளன், பள்ளப்பயல், பறையன், பறப்பறையன் போன்ற வார்த்தைகளை ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையில் பயன்படுத்துவது, எங்களது கருத்துப்படி மிகவும் கடுமையான கண்டனத்திற்குரியது. மேலும் பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமுமாகும். (50ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதும்) தற்போது, “நிக்கர்” அல்லது “நீக்ரோ” என்று ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை அழைப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றோ அது போலவே, நவீன யுகத்தில் இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

11. இந்த வழக்கைப் பொருத்த வரையில், பன்னீர்செல்வத்தை அவமதிப்பு செய்யும் நோக்கத்தில் “பள்ளப்பயல்” என்ற வார்த்தை, முதல் குற்றவாளியால் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆகவே, இது பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் தெளிவான குற்றமாகும்.

12. இந்த நவீன யுகத்தில், எவரது உணர்வுகளும் நோகடிக்கப்படக்கூடாது. குறிப்பாக, பல வேற்றுமைகளை உடைய இந்தியா போன்ற நாட்டில், ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி போன்றவைகளால் எவரொருவரது உணர்வுகளும் அவமதிப்பு செய்யப்பட்டு விடாதவாறு, நாம் கண்டிப்பாக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் நமது நாட்டை ஒற்றுமையுடையதாகவும், வலிமையானதாகவும் வைத்திருக்க முடியும்.

13. ஸ்வரன்சிங் மற்றும் பலர் -எதிர்- அரசு ((2008) 12 SCR 132) என்ற தீர்ப்பில் (பத்தி 21 முதல் 24 வரையிலான) கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

"21.பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்தவர்களாலும், உயர்ஜாதி என்று அழைக்கப்படும் மக்களாலும் அவமதிப்பு, கீழ்தரமாக நடத்துதல் மற்றும் கேலி செய்யும் நோக்கத்தில், தற்காலத்தில், ‘சமார்’ என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நிகழ்காலத்தில் 'சமார்’ என்று ஒருவரை அழைப்பது கீழ்த்தரமான வார்த்தை மற்றும் கடுமையான குற்றமுமாகும். மேலும் இன்று ‘சமார்’ என்று சாதரணமாக அழைப்பது, ஒரு ஜாதியைக் குறித்து குறிப்பிட அல்ல, மாறாக திட்டமிட்டு ஒருவரின் மாண்புக்கு இழிவு ஏற்படுத்தவும், அவமதிப்பு செய்யவுமே.
22. பிரிவு 3 (1) (x) க்கு சட்ட பொருள் விளக்கம் தரும்போது, இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதற்கான நோக்கத்தை பார்க்கவேண்டும். பட்டியலின பிரிவினரின் மாண்புக்கும், மனிததன்மைக்கும் இழுக்கு ஏற்படுத்துவதையும், அவர்களைத் தொந்தரவு செய்வதிலிருந்து தடை செய்வதற்காகவுமே இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பது, இச்சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையிலிருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் 3 (1) (x) பிரிவிற்கு பொருள் விளக்கம் கொள்ளும் போது, 'சமார்' என்ற வார்த்தையின் மூலத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதை விட பயன்பாட்டினால் அந்த வார்த்தை பெற்றுள்ள பரவலான அர்த்தத்தை பார்க்க வேண்டியதுள்ளது. அந்த வார்த்தையின் மூலப்பொருளை கண்டறிய முயல்வோமானால், அது இந்த சட்டத்தின் முக்கியமான குறிக்கோளை அடையவிடாது.

23. இது சமத்துவத்திற்க்கும், மக்களாட்சிக்குமான காலமாகும். எவருடைய உணர்வுகளும் காயப்படுத்தப்படக் கூடாது. மேலும் எந்த மனிதனும், சமூகமும் அவமதிப்பு செய்யப்படவோ அல்லது கீழ்த்தரமாக பார்க்கப்படவோ கூடாது. அரசியல் சாசனத்தின்ஆன்மா என்பதுடன்,அதன் அடிப்படை அம்சங்களின் பாகமும் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே, எங்களது கருத்துப்படி, ஒருவர், “சமார்” இனத்தை சேர்ந்தவராகவே இருந்தாலும், ஒருவரை அடையாளப்படுத்தும் போது, 'சமார்' என்ற வார்த்தையை உயர் ஜாதியினரும், பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் உபயோகிக்கக்கூடாது. ஏனெனில் அந்த வார்த்தையை உபயோகிக்கும்போது ஒருவருடைய உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன. மதம், ஜாதி, இனம், மொழி போன்ற பல்வேறு வேற்றுமைகளை உடைய குழுவினர் இருக்கும் நம் போன்ற நாட்டில் அனைத்து தரப்பு மக்களும், குழுக்களும் கண்டிப்பாக மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். மேலும், எவரொருவரும் தாழ்வாகப் பார்க்கப்படக்கூடாது. நமது நாட்டை ஒற்றுமையுள்ள நாடாக வைத்திட இது ஒன்றே வழியாகும்.

24. எங்களது கருத்துப்படி, பொது இடத்தில், பொது மக்கள் முன்னிலையில் வைத்து ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நபரை அவமதிப்பு மற்றும் கீழ்த்தரமாக நடத்தும் நோக்கத்துடன், 'சமார்' என்று அழைப்பது, நிச்சயமாய் பிரிவு 3 (1) (x) ன் கீழ் குற்றமாகும். அப்படியாக, கீழ்த்தரமாக அல்லது அவமதிக்கும் நோக்கத்தில்தான் ‘சமார்' என்று ஒருவர் அழைக்கப்பட்டார் என்பது, அது உபயோகிக்கப்பட்ட சூழலைச் சார்ந்தது."

14. மேலும் நாங்கள், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் மிகவும் ஆட்சேபணைக்குரிய இரட்டை குவளை முறை குறித்தும் குறிப்பிட விரும்புகிறோம். இந்த முறைப்படி, அனேக தேநீர் கடைகளிலும், உணவகங்களிலும் பட்டியலின மக்களுக்கும், பிற மக்களுக்கும் தேநீர் அல்லது பிற பானங்கள் வழங்கும்போது, தனித்தனி குவளைகள் பயன்படுத்தப்படுகிறது. எங்களது கருத்துப்படி, இது கடுமையான கண்டனத்திற்குரிய செயலாகும். மேலும், இது பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமுமாகும். ஆகவே இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டிப்பாக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், குற்றம் புரிந்தது உறுதிபடுத்தப்படும்போது கடுமையான தண்டனைகள் வழங்கப்படவும் வேண்டும். மேலும், தங்களது அதிகார வரம்புகளுக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற நடைமுறைகள் குறித்த செய்திகள் தெரிந்தும், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இதற்குப் பொறுப்பாக்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

15. லதா சிங் –எதிர்- உத்திரபிரதேச மாநில அரசு ((2006)5 scc 475) என்ற தீர்ப்பில் (பத்தி 14 முதல் 18 வரையிலான) கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

"14. இந்த வழக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டு பண்ணுகிறது. தற்போது மட்டுமின்றி நிகழ்வு தொடர்புடைய காலத்திலும், மனுதாரர் வயது வந்தவர் என்பதில் எவ்வித குழப்பமுமில்லை. ஆகவே அந்த பெண், தான் விரும்பும் எவருடனும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் அல்லது தான் விரும்பும் எவரையும் திருமணம் செய்து கொள்ளலாம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வதற்கு, இந்து திருமண சட்டத்திலோ அல்லது வேறு எந்த சட்டத்திலோ, எவ்விதமான தடைகளுமில்லை. ஆகவே மனுதாரரோ, அவரது கணவரோ, கணவரின் உறவினர்களோ என்ன குற்றம் செய்தார்கள் என்று எங்களால் கண்ணுற முடியவில்லை.

15. எங்களது கருத்துப்படி, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளான இந்த வழக்கின் குற்றவாளிகள் எவ்விதமான குற்றமும் செய்யவில்லை. மனுதாரர், வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பதால், அவரது சகோதரர்கள் உணர்ச்சிவசப்பட்டதைத் தொடர்ந்து, தொடரப்பட்டஇவ்வழக்கு நிகழ்வுகளில் நீதிமன்றம் மற்றும் நிர்வாக எந்திரமானது தவறாகக் கையாளப்பட்டுள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது போல மனுதாரரின் சகோதரர்கள் புரிந்த சட்டத்திற்குப் புறம்பான அடாவடி செயல்களுக்கு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர், அதற்கு நேரெதிராக மனுதாரரின் கணவர் மீதும் அவரது உறவினர்கள் மீதும் தவறாக நடவடிக்கை எடுத்துள்ளதை இங்கே நாங்கள் வருத்தத்துடன் கவனத்தில் கொள்கிறோம்.

16. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண் மற்றும் பெண்களுக்கெதிராக வன்முறைகளும், மிரட்டல்களும், தொந்தரவுகளும் செய்யப்படுவது தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் எங்களது கவனத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. எனவே அது தொடர்பான சில பொதுவான அறிவுறுத்தல்களை வெளியிட வேண்டியது அத்தியாவசியமானதென்று நாங்கள் உணர்கிறோம். தற்போது நமது நாடு அதன் வரலாற்றில் ஒரு மாற்றத்தின் காலகட்டத்தைக் கடந்து செல்கிறது. எனவே, இந்த நீதிமன்றமானது இது போன்றதொரு பொது பிரச்சனையில் இனியும் மௌனம் சாதிக்க முடியாது.

17. நமது நாட்டுக்கு ஜாதிய முறையானது பெரிய சாபமாகும். எனவே, எவ்வளவு விரைவாக இது ஒழிக்கப்படுகிறதோ அவ்வளவு நல்லது. சரியாகச் சொல்லப்போனால், நமது நாட்டிற்கு எதிராகவுள்ள சவால்களை ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் ஜாதிய முறையானது நாட்டை பிளவுபடுத்துகிறது. ஆகவே, ஜாதி மறுப்புத் திருமணமானது, நாட்டின் எதிர்பார்ப்பாகும். ஏனெனில் இதன் விளைவாகவே ஜாதிய முறைகள் ஒழிக்கப்படும். ஆனபோதிலும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் மிரட்டலுக்கும், வன்முறைக்கும் உள்ளாக்கப்படுவது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருத்தமளிக்கும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எங்களது கருத்துப்படி, இதுபோன்ற வன்முறைகளோ, மிரட்டல்களோ அல்லது துன்புறுத்தல்களோ முற்றிலுமாக சட்டத்திற்குப் புறம்பானவைகள் என்பதால் அவைகளைப் புரிந்தவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இது ஒரு சுதந்திரமான மக்களாட்சி நாடு என்பதால், உரிய வயதை அடைந்துவிட்ட ஒருவர், தான் விரும்பும் எவரையும் திருமணம் செய்துகொள்ளலாம். ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தங்களது மகன் அல்லது மகளுடனான சமூக உறவுகளை வேண்டுமானால் அதிகபட்சமாக அவர்களது பெற்றோர்கள் துண்டித்துக்கொள்ள முடியுமே தவிர, அவர்களை மிரட்டவோ, துன்புறுத்தவோ அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடவோ முடியாது. எனவே, நாடு முழுவதும் உரிய வயதையடைந்த ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் அல்லது அந்த தம்பதிகள் இருவரும் மிரட்டப்படுதல் அல்லது அவர்கள் மீது வன்முறைகள் ஏவிவிடப்படுதல் குறித்து கண்காணிக்க வேண்டுமென்று காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகளை அறிவுறுத்துகிறோம். அப்படியாக வன்முறை, மிரட்டல் அல்லது துன்புறுத்தல் செய்யும் நபரையோ அல்லது எவரது அறிவுறுத்தலின் பேரில் செய்யப்படுகிறதோ, அவர்கள்மீது குற்றவியல் நடைமுறைகளை எடுப்பதை இலக்காகக்கொண்டு செயல்படுவதுடன், அது போன்ற நபர்கள் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
 18. தங்களது சொந்த விருப்பத்தில், ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களை, கௌரவக் கொலைகள் செய்வதாக நாங்கள் சில நேரங்களில் கேள்விப்படுகிறோம். அது போன்ற கொலைகளில் கௌரவமானதாக எதுவும் இல்லை என்பதோடு, அப்படிப்பட்டவர்கள் செய்யும் அதுபோன்ற கொலைகள் காட்டுமிராண்டித்தனமான, அவமானப்படத்தக்க, கொடூரமான, நிலப்பிரபுத்துவ மனநிலையுடன் கூடிய படுகொலைகளேயன்றி வேறில்லை. எனவே, அப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதன் வாயிலாக மட்டுமே, இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை நாம் வேறோடு பிடுங்கி எறிய முடியும்”.

16. ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட அல்லது திருமணம் செய்து கொள்ள விரும்பும் வேறுவேறு ஜாதியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள், கௌரவக் கொலைகள் அல்லது இதர வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும், நிறுவனமாக்கப்பப்பட்ட வழியில் ஊக்கப்படுத்திவரும், தனி மனிதர்களுடைய வாழ்வில் தலையீடு செய்யும் “காப் பஞ்சாயத்துகள்” (தமிழ்நாட்டில் கட்டப் பஞ்சாயத்துகள் என அறியப்படுகின்றன) தொடர்பாக சமீப காலங்களாக கேள்விப்படுகிறோம். எங்களது கருத்துப்படி, இது முழுவதுமாக சட்டப்புறம்பானதும், வேறோடு களைந்தெறியப்பட வேண்டியதுமாகும். மேலே சொல்லப்பட்ட லதா சிங் வழக்கில் கூறப்பட்டுள்ளது போல், கௌரவக் கொலைகளிலும் இதர வன்கொடுமைகளிலும் கௌரவமானதாக ஏதும் இல்லை. மேலும், அவை காட்டுமிராண்டித்தனமான மற்றும் அவமானமான கொலைகளேயன்றி வேறேதுமில்லை. சகமனிதர்களின் தனிமனித வாழ்வில் வன்கொடுமைகளை நிகழ்த்தும் முரட்டுத்தனமான, நிலபிரபுத்துவ சிந்தனைகளைக் கொண்ட நபர்கள், கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இந்த வழியில் மட்டுமே காட்டுமிராண்டித்தனமான மற்றும் நிலப்பிரபுத்துவ சிந்தனைகளுடன்கூடிய மனநிலை உடையோரை நாம் வேறோடு பிடுங்கி எறிய முடியும். மேலும் தங்களது கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்ளும் இது போன்ற செயல்கள், முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான கட்டப் பஞ்சாயத்துகளுக்குச் சமமாகும்.

17. ஆகவே, இது போன்ற வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி, நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுத்துகிறோம். இது போன்ற வன்கொடுமைகள் நிகழின், அது நிகழக் காரணமானோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்வது மட்டுமன்றி, (1)சம்பவம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைக்கப்பெற்று, அச்சம்பவம் அதுவரையில் நடந்தேராமல் இருக்கும்பட்சத்திலும், அதனைத் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை அல்லது (2)சம்பவம் நடந்து முடிந்திருப்பின், குற்றம் புரிந்தவர்களையும், ஏனைய சம்மந்தப்பட்ட நபர்களையும் கைதுசெய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பின், மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஏனைய பொறுப்புடைய அதிகாரிகள் போன்றவர்களை மாநில அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறோம். ஏனெனில் எங்களது கருத்தில் அவர்களே நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்புடையவர்களாகக் கருதப்படுவார்கள்.

18. இந்த வழக்கில், நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள் போல மேல்முறையீட்டாளர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் கருணைக்கு தகுதியுடையோர்கள் அல்ல. ஆகவே, இவற்றைக் கருத்தில்கொண்டு இந்த இரு மேல்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

19. இந்த தீர்ப்பின் நகல், மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மூத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்/மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதவிகளுக்குக் குறையாத அனைத்து அதிகாரிகளுக்கும், இதனை கண்டிப்பான முறையில் முறையில் அமல்படுத்த வேண்டும் என்ற அறிவுரையுடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர்கள் ஆகியோருக்கு அனுப்பப்படவேண்டும். மேலும் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பரப்புரை செய்திட வேண்டி, அனைத்து பொது மற்றும் இதர உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கும் இதன் நகல் அனுப்பப்படும்.

தொகுப்பு :
டாக்டர் மு.பாண்டியராஜன் 
மனித உரிமைகள் பாதுகாப்பு கழகம் - (international)
Email: hrdointernational@gmail.com